தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

2021-05-01@ 13:57:04

உடுமலை: உடுமலை அருகே உள்ள ஏரிப்பாளையத்தில், நாகராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. ஆலையில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். இது பற்றி உடுமலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் குடிநீர் வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் 20க்கும் மேற்பட்ட இயந்திரங்கள், ஏற்றுமதிக்கு தயாராக இருந்த தென்னை நார் மஞ்சுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
முதல்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.