ஊட்டி:ஊட்டி அருகேயுள்ள சூட்டிங் மட்டம் பகுதியில் சூழல் சுற்றுலா மேம்பாட்டு குழுவினர் கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள் சுற்றுலா தலங்களுக்கு செல்வதுடன், இயற்கை சூழ்ந்த பகுதிகளுக்கு அதிகம் செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இயற்கை சூழ்ந்த பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், இவர்கள் சூழல் மேம்பாட்டு குழுக்களை கொண்டு இந்த சுற்றுலா தலங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ள பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களை கொண்டே சூழல் மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டு, சுற்றுலா தலங்களை தற்போது பராமரித்து வருகின்றனர்.
மேலும், அவர்களின் வாழ்வாதரம் மேம்படும் வகையில் கைவினை பொருட்கள் விற்பனை செய்ய அரங்கு அமைக்கப்படுகிறது. அங்கு பழங்குடியின மக்கள் தயாரிக்கும் பல்வேறு கைவினை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வாதரம் மேம்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள சூட்டிங் மட்டம் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை தோடர் பழங்குடியின மக்கள் பராமரித்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் கைவினை பொருட்களை விற்பனை செய்வதற்காக தற்போது சூட்டிங் மட்டம் பகுதியில் அரங்கு அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.