சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு உணர்ச்சி பொங்க பதிவிட்ட பாஜ எம்பி

2021-04-30@ 15:14:39

புதுடெல்லி: சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு தனது கடந்து கால வாழ்க்கையை நினைவுபடுத்தி பாஜ எம்பி ஹேம மாலினி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச நடன தினமான நேற்று பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான ஹேம மாலினி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சர்வதேச நடன தினமான இன்று (ஏப். 29) எனக்கு மிகவும் சிறப்பான நாள். கடந்தகால வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது, என்னுடைய வாழ்க்கையில் நடனம் எப்படி ஆதிக்கம் செலுத்தியது என்பதை உணர்கிறேன். கிளாசிக்கல், நாட்டியம், குச்சிபுடி, மோகினியாட்டம், கதக் முதல் பாலிவுட் நடனம் வரை அனைத்து தளங்களிலும் பணியாற்றினேன்.

நான் என்னவென்று சொல்லுவேன். என்னை உருவாக்கிய எனது அனைத்து குருக்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார். ஹேம மாலினி பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞராக இருப்பதால், முழு நேர அரசியலையும் தாண்டி அவ்வப்போது கலை பணிக்காக பணியாற்றி வருகிறார். அவரது மகள்கள் ஈஷா தியோல் மற்றும் அஹானா தியோல் ஆகியோர் பயிற்சி பெற்ற ஒடிஸி நடனக் கலைஞர்கள். குழந்தைகளுக்கான கிளாசிக்கல் நடனம் தளத்தை உருவாக்கி, நாட்டியா விஹார் கலகேந்திர நடனப் பள்ளியையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.