திருமலை: தெலங்கானாவில் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப வந்த பாதுகாவலர், வங்கி ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.5 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதில் பாதுகாவலர் குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள குகட்பல்லியில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் உள்ள இந்த ஏடிஎம் மையத்தில் வழக்கம்போல் பாதுகாவலருடன் இணைந்து வங்கி ஊழியர் நேற்று பணம் நிரப்பிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு திடீரென வந்த மர்ம நபர்கள் சிலர் வங்கி ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் பாதுகாவலரும், வங்கி ஊழியரும் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் ஏடிஎம் மையத்தில் நிரப்ப கொண்டு வந்த ரூ.100 ரூபாய் நோட்டுகள் அடங்கி பையை மர்ம நபர்கள் எடுத்து கொண்டு தப்பினர். அந்த பையில் ரூ.5 லட்சம் இருந்தது. காயமடைந்த ஊழியரும், பாதுகாவலரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் காவலாளி இறந்தார். இது குறித்து சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.