பட்டா வழங்க லஞ்சம் கேட்ட நிலஅளவு பிரிவு துணை ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

2021-04-30@ 00:24:59

சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள மாம்பலம்-கிண்டி தாலுகா அலுவலகத்தில் 2008-2009ம் ஆண்டில் நில அளவை பிரிவில் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கே.ராமமூர்த்தி. இவரிடம் 2009ம் ஆண்டு, அசோக் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்துக்கு பட்டா கேட்டு மனு கொடுத்துள்ளார். ஆனால், எந்த காரணமும் தெரிவிக்காமல் அந்த மனுவை ராமமூர்த்தி நிராகரித்துள்ளார். இதனால் அசோக், வருவாய்த்துறை அமைச்சருக்கு மனு அனுப்பினார். அமைச்சரின் நேர்முக உதவியாளர் அந்த மனுவை தாசில்தாருக்கு அனுப்பி வைத்து பரிசீலிக்க கூறியுள்ளார்.

இதனைதொடர்ந்து பட்டா வழங்க துணை ஆய்வாளர் ராமமூர்த்தி ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். முதற்கட்டமாக ரூ.3 ஆயிரம் வழங்கவும், பட்டா தயாரானதும் மீதமுள்ள பணத்தை வழங்கும்படியும் கூறி உள்ளார். இதுகுறித்து அசோக், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரையின் பேரில் லஞ்சப்பணம் ரூ.3 ஆயிரத்தை அசோக் கொடுத்த போது அதை பெற்றுக்கொண்ட ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, துணை ஆய்வாளர் ராமமூர்த்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.