டெல்லி: நிலைமையை சமாளிக்க அரசின் அனைத்து துறைகளும் ஒற்றுமையாகவும், விரைந்தும் செயல்படுவதாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து, மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு பல மாநிலங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை போக்குவது தொடர்பாக பிரதமர் மோடி பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார். ஏற்கனவே மாநில முதல்வர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்திய மோடி, மாநிலங்களில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்கவும், மருந்து தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும் ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், அரசு உயர் அதிகாரிகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள், ஆக்சிஜன் விநியோக நிறுவனங்கள், முப்படைத் தளபதிகள் ஆகியோருடனும் ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடந்தது. அப்போது கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் அதைத் திறம்பட எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பரவலுக்குப் பிறகு நடைபெறும் முதல் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் இதுவாகும். இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாட்டில் கொரோனா 2வது அலை குறித்து விவாதிக்க அமைச்சரவை கூட்டம் கூடியது.
நிலைமையை சமாளிக்க அரசின் அனைத்து துறைகளும் ஒற்றுமையாகவும், விரைந்தும் செயல்படுகிறது. மேலும், அமைச்சர்கள் அந்தந்த பகுதி மக்களுடன் தொடர்பில் இருக்கவும், அவர்களுக்கு உதவவும், மக்களின் கருத்துகளை பெறவும் பிரதமர் கேட்டுக்கொண்டார். அதேபோல், உள்ளூர் மட்டத்தில் உள்ள பிரச்னைகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு தீர்வு காணப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.