பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு!: சிறப்பு டிஜிபி மீதான புகாரை விசாரிக்க சிபிசிஐடி-க்கு ஐகோர்ட் கெடு..!!
2021-04-30@ 16:26:50
சென்னை: சிறப்பு டிஜிபி-க்கு எதிரான பாலியல் தொல்லை வழக்கு விசாரணையை 6 வாரங்களில் முடிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபி-க்கு எதிராக தமிழக டிஜிபி-யிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சிறப்பு டிஜிபி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்டார்.
ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட உரையில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த வழக்கை உயர்நீதிமன்றமே கண்காணிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், வழக்கு தொடர்பாக 106 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாகவும், இன்னும் 30 பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஏற்கனவே விசாகா கமிட்டி அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுவிட்டதாகவும், முடிவுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து விசாரணையை முடிக்க எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு விசாரணை அதிகாரி சார்பில் 4 முதல் 8 வாரங்கள் வரை கால அவகாசம் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை 6 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை அரசின் அனுமதி பெற்று சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு வழக்கினை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தார்.