கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு 40 நாடுகள் உதவிக்கரம்!: மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பி வைப்பு..!!

2021-04-30@ 11:07:06

டெல்லி: கொரோனா பிடியில் சிக்கி தவித்து வரும் இந்தியாவிற்கு 40க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவிக்கரம் நீட்டி உள்ளன. கொரோனா 2ம் அலையால் இந்தியா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2ம் அலையால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை கண்டு உலக நாடுகள் தாமாக முன்வந்து உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தியாவில் தீவிரமடையும் கொரோனாவால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை, ஆக்சிஜன், தடுப்பு மருந்துகள் கிடைக்காமல் தவித்து வருகிறது. 


இதனை அடுத்து கொரோனாவால் சிக்கி தவித்து வரும் இந்தியாவிற்கு 40க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி புரிந்துள்ளனர். குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சிங்கப்பூர், துபாய், ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா  உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் உற்பத்தி செறிவூட்டிகளையும், சேமிப்பு கட்டமைப்புகளையும் வழங்கி உள்ளன.


இதேபோன்று பல்வேறு நாடுகளும் வெண்டிலேட்டர்கள், மருந்து பொருட்களையும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளன. இது தொடர்பாக பேசிய மத்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ்வர்தன், நாட்டில் 550 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ உலக நாடுகளுடன் பேசி வருவதாக தெரிவித்தார்.