18 வயது மேற்பட்டவர்கள் தடுப்பூசிக்கு இணையதளத்தில் பதிவு செலுத்துவதில் சிக்கல்!: இளைஞர்கள் ஏமாற்றம்..!!
2021-04-30@ 11:51:51
சென்னை: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்காக கோவிட் இணையதளத்தில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதால் நாடு முழுவதும் மே 1ம் தேதி முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.
அதன்படி தடுப்பூசி செலுத்திக்கொள்ள www.cowin.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. ஆனால் இணையதளத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட பிரிவினர் பதிவு செய்வதற்கான வசதி செய்து தரப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பதிவு செய்வதற்கான வழிமுறை மட்டுமே இணையதளத்தில் இருப்பதால் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய முயன்ற இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
நேரடியாக தடுப்பூசி மையத்திற்கு சென்று விண்ணப்பித்து தடுப்பூசி செலுத்தும் முறை 18க்கும் மேற்பட்ட வயது பிரிவினருக்கு அனுமதி இல்லை எனவும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாளை திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.