முதல் அலை பாதிப்பிலிருந்தே இன்னும் மீளவில்லை தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக்கோரி மனு: விரைவில் விசாரணைக்கு வருகிறது

2021-04-30@ 01:57:38

மதுரை: தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையின்போது அமலில் இருந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதித்தனர். பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். முதல் அலையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே இன்னும் பலர் மீளவில்லை.

இதனால், தற்போதைய இரண்டாம் அலை ஊரடங்கை எதிர்கொள்ள பலரும் தயாராக இல்லை. ஊரடங்கால் கொரோனா நோய் தொற்று பரவல் குறையும் என அறிவியல்ரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் ஊரடங்கு என்பது பலரது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். எனவே, இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கிற்கு தடை விதிக்க வேண்டும். இதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.