தமிழ்நாட்டிற்கு தேவையான ரெம்டெசிவிர் மற்றும் தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும்? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

2021-04-30@ 16:37:55

சென்னை: தமிழ்நாட்டிற்கு தேவையான ரெம்டெசிவிர் மற்றும் தடுப்பூசிகள் எப்போது முழுமையாக விநியோகம் செய்யப்படும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்டவை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது தமிழக அரசின் அறிக்கையில் 2.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும் நிலையில் 59 ஆயிரம் குப்பிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும் தமிழகத்திற்கு தேவையான மருந்துகள் முழுமையாக எப்போது கிடைக்கும் என்ற விவரங்களை தெரிவிக்குமாறு மத்திய அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக கூறிய நீதிபதிகள் அதனை அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே வாக்கு எண்ணிக்கையின் போது கொண்டாட்டங்களில் ஈடுபடாமல் அரசியல் கட்சி தலைவர்கள் முன் உதாரணமாக திகழவேண்டும் எனவும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.