தட்டுப்பாடு எதிரொலி!: 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது...மும்பை மாநகராட்சி அறிவிப்பு..!!
2021-04-30@ 11:27:33
மும்பை: தட்டுப்பாடு காரணமாக 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், தட்டுப்பாடு காரணமாக 3 நாட்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது என்று மும்பை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் கொரோனா சிகிச்சை பெரும் நோயாளிகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்ததால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி முகாம்களில் ஒரே நேரத்தில் மக்கள் குவிந்ததால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் 3 நாட்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது என்றும் தடுப்பூசி கிடைத்த பிறகு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மராட்டியத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3ம் அலை வீசும் என்று மராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தாவே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள அம்மாநில மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.