முத்துப்பேட்டையில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கொலை வழக்கு.: ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேர் கைது..!

2021-04-29@ 16:40:15

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). இவர் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆலங்காடு பகுதியில் ஒன்றிய கவுன்சிலராக சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அதிமுகவில் இணைந்தார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முத்துப்பேட்டையை சேர்ந்த அமமுக பிரமுகர் கோவிலூர் ஜெகன் என்பவரது அண்ணன் மதன் என்பவரைப் படுகொலை செய்த வழக்கில் ராஜேஷ் முதல் குற்றவாளி ஆவார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இது தொடர்பான வழக்கு தற்போது திருவாரூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முத்துப்பேட்டைக்கு வந்த ராஜேஷ், ஆலங்காட்டுக்கு தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து மோட்டார் பைக்கில் வந்த சிலர் ராஜேஷை விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பின்னர் தகவலறிந்து வந்த முத்துப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.