சென்னை: மறைமலைநகர் கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் மாறன் என்கின்ற திருமாறன்(55), அதிமுக பிரமுகர். இவர் கடந்த 20 வருடங்களாக கம்பெனிகளுக்கு ஆட்களை சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். முன்விரோதம் காரணமாக திருமாறனை அவரது எதிரிகள் 4 முறை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றனர். இந்நிலையில் திருமணநாளை முன்னிட்டு கடந்த 24ம் தேதி இரவு மறைமலைநகரில் உள்ள முத்துக்குமாரசாமி கோயிலில் திருமாறன் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தார். பின்பு அங்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். அப்போது அங்கு திடீரென 4 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து கோயில் உள்ளே புகுந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை திருமாறன் மீது வீசியது. இதில் தலைசிதறி திருமாறன் உயிரிழந்தார். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சென்னை ராமபுரம் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் மகன் சக்திவேல்(25), முத்து மகன் மணிமாறன்(24), சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சுந்தராஜ் மகன் கலைச்செல்வன்(26), சென்னை படப்பை பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் வெங்கட் (எ) வெங்கட்ராமன் (40) ஆகிய 4 பேர்களும் நேற்று கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் 1 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். குற்றவாளிகளை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி அருண்பாண்டியன் உத்தரவிட்டார். அதனையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் குற்றவாளிகள் 4 பேரையும் திருக்கோவிலூர் கிளை சிறையில் அடைத்தனர்.