ரஷியா: கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ரஷியா கணிசமான உதவிகளை வழங்கும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இதற்காக ரஷிய அவசர சேவைகளுக்கான விமானத்தை இந்தியாவுக்கு அனுப்ப ரஷிய தலைமை முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றின் முதல் அலையின்போது அமெரிக்கா உள்பட உலக நாடுகள் பலவற்றுக்கு இந்தியா மருந்து விநியோகம் செய்து உதவியது. கொரோனா 2-வது அலையில் இந்தியா மற்ற நாடுகளைவிட அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
தினந்தோறும் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை லடசக் கணக்கில் உள்ளது. இந்நிலையில் இந்தியா கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் சமயத்தில் உலக நாடுகள் பல இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன. ரஷியாவும், இந்தியாவுக்கு உதவுவதாக நேற்று அறிவித்துள்ளது. இந்திய - ரஷிய கூட்டுறவின் அடிப்படையில் கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ரஷியா கணிசமான உதவிகளை வழங்கும் என உறுதியளித்துள்ளது.
ரஷிய அவசர சேவைகளுக்கான விமானத்தை இந்தியாவுக்கு அனுப்ப ரஷிய தலைமை முடிவு செய்துள்ளது என்று ரஷிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், செயற்கை நுரையீரல் காற்றோட்டத்திற்கான எந்திரங்கள் மற்றும் பிற தேவையான மருத்துவ பொருட்கள் விமானத்தில் சில நாட்களில் வந்து சேரும் என கூறப்படுகிறது.