கொரோனாவால் இறந்த பெண் உடலை ஒப்படைக்க 19 ஆயிரம் லஞ்சம் கேட்ட 2 சுகாதார ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்

2021-04-29@ 00:35:04

சென்னை: கொரோனா தொற்றால் இறந்த பெண்னின் உடலை வழங்க ரூ.19 ஆயிரம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சுகாதார ஆய்வாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை, அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (57), இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இரவு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சாந்தி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் போது கையொப்பம் போட கூறியுள்ளனர். அப்போது, ஆம்புலன்ஸ் மற்றும் இதர ஏற்பாடுகளுக்காக  சுகாதார ஆய்வாளர் தசரதன் என்பவர் 19 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.  கையில் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் பணம் கொடுக்காததால் உடலை வழங்காமல் அலைக்கழித்துள்ளனர்.

இதற்கிடையே,  கூகுள் பே மூலம்  முன்பணமாக ரூ.10 ஆயிரம் அனுப்பும்படி கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்குள் மருத்துவமனை வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நடந்த சம்பவம் குறித்து ஓமந்தூரார் மருத்துவமனை டீன் ஜெயந்தியிடம் கூறியுள்ளனர்.  இதுதொடர்பாக, அவர் விசாரணை மேற்கொண்டு உடலை உறவினர்களிடம்  இறுதிச் சடங்கிற்கு ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் சுகாதார ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தார். இந்நிலையில், மாங்காடு சுகாதார ஆய்வாளர்கள் சுந்தரேச பெருமாள் மற்றும் தசரதன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.