மதுரை: பரமக்குடியில் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டிருந்த அரசு மருத்துவர்களை டிஎஸ்பி தரக்குறைவாக நடத்திய விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மதுரை டிஐஜிக்கு தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பரமக்குடியில் அரசு கலைக்கல்லூரியில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் விக்னேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கடந்த 27ஆம் தேதி இரவு 9 மணிக்கு சொந்த தேவைகளுக்காக வெளியே வந்துள்ளனர்.
அப்போது ரோந்து பணியில் இருந்த டிஎஸ்பி வேல்முருகன் இருவரையும் தரக்குறைவாக ஒருமையில் திட்டியதுடன் போலீஸ் வாகனத்தில் ஏற்றி 3 மணி நேரம் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை கண்டித்தும் டிஎஸ்பி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் இரண்டு மணி நேரம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே நாளிதழில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. மேலும் அரசு மருத்துவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று டிஎஸ்பி தரக்குறைவாக நடத்திய விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மதுரை டிஐஜிக்கு உத்தரவிட்டுள்ளது.