சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று எழுதியுள்ள கடிதம்: பாஜ தலைமையில் ஆளுகிற மத்திய அரசு, புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அதை எதிர்க்கிறது. அதற்கான காரணங்களை தங்களின் கனிவான கவனத்திற்குக் கொண்டு வர விழைகிறேன். இதுவரை இந்தியை பரப்பியது போதாது என்று, புதிய கல்விக்கொள்கையின் வழியாக, சமஸ்கிருத மொழியைக் கொண்டு வந்து திணிக்கும் முயற்சிகளை பாஜ தொடங்கி இருக்கிறது.
மாநில அரசுகளிடம் இருந்து கல்வியை முற்றிலுமாக பறித்துக் கொள்வதே, இக்கொள்கையின் நோக்கம். அனைவருக்கும் தாய்மொழிக் கொள்கை என்று பேசுகின்றார்களே தவிர, உண்மையில், இந்தியை திணிக்கவும், அதற்கும் மேலாக இப்போது சமஸ்கிருதத்தை திணிக்கவும்தான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, பாஜ அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, தாங்கள் விரிவாக ஆய்வு செய்து, தங்கள் மாநிலத்தின் நலன்களை பாதுகாக்கிற வகையில், எதிர்ப்புக் கருத்தை வெளிப்படுத்துமாறு வேண்டுகிறேன்.