கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம், ராகுல்காந்தி வார்த்தையில் சொல்வது என்றால் சுனாமி வேகத்தில் இருக்கும் என்பதை ஏன் பிரதமர் மோடி கூட கணிக்கவில்லை. முதல் அலை வந்த போது தாமதமாக சுதாரித்தாலும், பொருளாதார பேரழிவை தவிர 130 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் உயிர்பலி, பாதிப்பு மற்ற நாடுகளை கணக்கிடுகையில் குறைவு. ஆனால் இரண்டாம் அலை எழுந்து நிற்க முடியாத அளவுக்கு அடித்து துவைத்துக்கொண்டு இருக்கிறது.
மத்திய அரசு கணக்குப்படி மட்டும் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டிவிட்டது.
முதல் அலையில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 1 லட்சத்தை எட்டிநின்றது. இரண்டாவது அலையில் மூன்றரை லட்சத்தை தொட்டு நிற்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 19 வரை 1 கோடி தான் பாதிப்பு இருந்தது. இதோ ஏப்ரல் முடிவில் 1.50 கோடியை தாண்டி நிற்கிறது. அதுவும் 28 கோடி பேருக்கு மட்டும் நடந்த சோதனையில் தான் இந்த கணக்கு. மே மாத மத்தியில் தினசரி பாதிப்பு 13 லட்சத்தை எட்டும் என்றார்கள். இப்போது இல்லை, இல்லை போகிற வேகத்தில் 45 லட்சத்தை கூட தொடும் என்கிறார்கள். அந்த அளவுக்கு கட்டுப்படுத்த முடியாமல் பரவி வருகிறது கொரோனா வைரஸ்.
கொத்து கொத்தாய் மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் மடிந்து போகிறார்கள். வடமாநில ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அலறுகின்றன. கடந்த மார்ச்சில் கொரோனா அலை தாக்கம் தொடங்கிய பின்னரும் அக்டோபரில் தான் புதிய ஆக்சிஜன் ஆலைகளுக்கான ஏலத்தை மத்திய அரசு அறிவித்தது. அதில் 162 ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, 33 ஆலைகள் மட்டுமே இப்போது வரை நிறுவப்பட்டிருக்கின்றன. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் மேலும் 59 ஆலைகள் நிறுவப்படும். மே மாத இறுதியில் 80 ஆலைகள் நிறுவப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போது காட்டிய வேகத்தை, ஏன் மருத்துவ கட்டமைப்பை உருவாக்குவதில் மோடி அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் ஏன் அக்கறை காட்டவில்லை என்பது சோகமான கேள்வி.
எல்லாவற்றையும் விட தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறு இல்லை. தேர்தல் பிரசாரம் தொடங்கிய போது வேற்று கிரகத்தில் இருந்தீர்களா என்ற விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இரண்டாம் அலை வேகம் காட்டும் போது மேற்கு வங்கத்தில் 5 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. மீதம் உள்ள 3 கட்டத்தையும் ஒரே கட்டமாக நடத்த முதல்வர் மம்தா கோரிக்கை விடுத்தார். ராகுல்காந்தி பிரசாரத்தையே ரத்து செய்தார். அப்போதெல்லாம் அசைந்து கொடுக்காமல் இப்போது மே 2ல் ஓட்டு எண்ணிக்கையின் போது வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு தடை என்று அறிவித்து இருக்கிறது தேர்தல் ஆணையம். என்ன ஒரு தீர்க்கமான நடவடிக்கை?.