தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலால், நேற்று முதல் ‘‘மினி முழு ஊரடங்கு’’ போல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது.
ஒருபுறம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் சூழல், மறுபுறம் மாணவர்களின் கல்வியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு முறையில் கடந்த ஓராண்டாக பாடங்களை நடத்தி வருகின்றன. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுமென அரசு அறிவித்தது. ஆனால், இது முழு பலன் தரவில்லை. ஏற்கனவே ஏழை மாணவர்கள் மட்டுமே, அரசுப்பள்ளிகளுக்கு சென்று பயின்று வருகின்றனர். இந்த சூழலில் அவர்களுக்கு உரிய கல்வி கிடைக்காமல், கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தில் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம், பொதுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு கடந்த ஜன. 19ம் தேதி 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பின்னர் பிப். 8ம் தேதி முதல் 9ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், ஆசிரியர், மாணவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. பிளஸ் 1 வரை ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுமா, இல்லையா என்ற முடிவுக்கு இதுவரை பள்ளிக்கல்வித்துறை வரவில்லை. ஜூலை / ஆகஸ்ட் மாதத்தில் சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்கப்படுமென கூறி உள்ளது. ஆனால், 2வது அலை மே, ஜூன் மாதங்களில்தான் வேகமெடுக்குமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகளை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூற வேண்டும்.
சுமார் 15 மாதங்களாகவே மாணவர்கள் முறையான கல்வி பெற முடியாமல் உள்ளனர். பள்ளி செல்லாமல் வீட்டிற்குள் இருப்பதை விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொண்டுள்ளனர். பொதுவாக, படிப்படியாக கல்வி பயின்று, அடுத்தடுத்த நிலைக்கு செல்வதே மாணவர்களின் திறனை வளர்க்கும். அதற்கேற்ற வகையிலே கல்வி முறையும் இருக்கும். தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைனில் பயின்றாலும் முழு ஈடுபாட்டுடன் படிப்பதில்லை என்ற புகார் பொதுவாக உள்ளது.
பெரும்பாலான மாணவர்களுக்கு பதில், பெற்றோரே ஆன்லைன் கிளாஸை கவனித்து, பின் பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று முழுமையாக குறைவதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை ஆகலாமென மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை சில மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறந்தாலும், மாணவர்கள் முழுத்திறனோடு படிக்க முடியுமா? அடுத்தநிலை பாடங்களை இயல்பான சூழ்நிலையில் கற்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. அடுத்து அமைய உள்ள புதிய அரசு, இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறையுடன் விரிவாக விவாதித்து, ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். கல்வியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து வகையிலான மாணவர்களுக்கும் கல்வி சென்று சேர வேண்டும். அதற்கேற்ப திட்டமிடுதல் மிகவும் அவசியம். கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்படுவது கவலையளித்தாலும், கல்வியறிவும் பாதிக்கப்படுவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அரசுகள் இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். மாணவர்களுக்கு மனச்சுமையை அதிகரிக்காத வகையில் ஒரு நல்ல முடிவு எட்டப்பட வேண்டும்.