கொரோனா அச்சத்தால் ஆம்புலன்ஸ் மறுப்பு!: உடல்நலக்குறைவால் உயிரிழந்த தாயார் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற மகன்..ஆந்திராவில் சோகம்..!!
2021-04-27@ 10:26:50
ஹைதராபாத்: கொரோனா அச்சம் காரணமாக உடல்நலக்குறைவால் உயிரிழந்தவரின் உடலை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் முன்வராததால் மகனே தாயின் சடலத்தை கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சிகாகுளம் அடுத்த கிள்யூங் என்ற கிராமத்தை சேர்ந்த சென்சுலா என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து தனது சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை மகன் அணுகினார்.
ஆனால் கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் சடலத்தை ஏற்றி செல்ல அவர்கள் மறுத்துவிட்டார்கள். இதனால் சென்சுலாவின் மகனே, நண்பர் ஒருவர் துணையோடு சடலத்தை இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு சென்றார். இருசக்கர வாகனத்தில் சடலம் கொண்டு சென்றதை அறிந்தும் போலீசார் கண்டுகொள்ளாமல் அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆந்திராவில் கொரோனா அச்சத்தால் யாரும் உதவ முன்வராத அவலம் நீடிப்பது இந்த காட்சியின் மூலம் உறுதியாகியுள்ளது. மனஉறுதியுடன் தாயாரின் சடலத்தை இருசக்கர வாகனத்திலேயே கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.