பெரம்பலூர் : கொரோனா 2வது அலையின் தீவிரம் எதிரொலியாக பெரம்பலூர் மாவட்டத்தில் கோயில்கள், தியேட்டர்கள், விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டன.கொரோனா தொற்று பரவல் 2வது அலையாக நாடெங்கும் அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த, மத்திய அரசு வழிகாட்டுதலின் பேரில் மாநில அரசு சில தளர்வுகளுடன் கூடிய புதிய உத்தரவுகளை 26ம் தேதி அதிகாலை 4 மணி முதல் அமுல்படுத்தியுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூரிலுள்ள 4 தியேட்டர்கள், அரும்பாவூரில் உள்ள ஒரு தியேட்டர் என மொத்தமுள்ள 5 தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. மாவட்ட விளையாட்டு மைதானத்திலுள்ள அரசு நவீன உடற்பயிற்சிக்கூடம், பெரம்பலூர் நகரிலுள்ள தனியார் உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.
ஓட்டல்கள் மற்றும் டீக் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை என்பதால் ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நடைதிறக்கும் நாட்களில் பூஜைகள், அபிஷேகங்களை பூசாரிகள், குருக்கள் மட்டுமே நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற, சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் வழக்கம் போல் திறக்கப்பட வேண்டிய நடை நேற்று திறக்கப்படாமல் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து மூடப்பட்டது. கோயில் பூசாரியை கொண்டு உள்ளேயே பூஜை, அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதேபோல், பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்ம புரீஸ்வரர் கோயில், மரகதவள்ளித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயில், புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான செட்டிக்குளம் பால தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களும் பக்தர்களின் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாலிகண்டபுரம் வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோயில் கடந்த வாரம் முதலே மூடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.டாஸ்மாக் பார்கள் மூடல்: கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக மறுதேதி அறிவிக்கப்படும் வரை டாஸ்மாக் பார் மூடப்படுமென பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின், டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனி யார் மதுபான கூடங்கள் அனைத்தும் 26ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து மூடப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.