பாஜக மாவட்ட துணைத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!: தி.மலை பாஜக வேட்பாளர் தணிகைவேல் மீது வழக்குப்பதிவு..!!
2021-04-27@ 18:03:45
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தேர்தல் முன்விரோதத்தில் பாஜக மாவட்ட நிர்வாகி வீட்டில் ஆதரவாளர்களை ஏவிவிட்டு பெட்ரோல் குண்டு வீசியதாக திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் தணிகைவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை ரமணா நகர் பகுதியில் வசித்து வருபவர் 44 வயதான தொழிலதிபர் அருணை ஆனந்தன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், பாஜக-வின் திருவண்ணாமலை மாவட்ட துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் திருவண்ணாமலை தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்ட அக்கட்சியின் மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் தணிகைவேலுவுக்கும், அருணை ஆனந்தனுக்கும் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு போலி தங்க நாணய டோக்கன் கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அருணை ஆனந்தனிடம் வாங்கிய 28 லட்சம் ரூபாய் பணத்தை தணிகைவேல் திருப்பி கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு தணிகைவேலின் ஆதரவாளர் அஜித், 3 பேருடன் ஆனந்தன் வீட்டிற்கு சென்று மிரட்டலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஆனந்தன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அவர்கள் தப்பியதாக கூறப்படுகிறது. இதில் நல்வாய்ப்பாக தப்பிய ஆனந்தன், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாஜக மாவட்ட துணை தலைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநில வர்த்தகர் அணி துணை தலைவருமான தணிகைவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
தணிகைவேலின் ஆதரவாளர்கள் அஜித், அவரது நண்பர் சசிகுமார் அகியோரை கைது செய்த போலீசார் தணிகைவேல் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர். வாக்காளர்களுக்கு போலியான தங்க நாணய டோக்கன் தர மறுத்ததாலும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாலும் பாஜக நிர்வாகி வீட்டின் மீது அக்கட்சியின் திருவண்ணாமலை வேட்பாளர் ஆதரவாளர்களை ஏவிவிட்டு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.