லாஸ் ஏஞ்சல்சில் எளியமுறையில் 93வது ஆஸ்கர் விருது விழா: சீன பெண் இயக்குனரின் நோமேட்லேண்ட் படத்துக்கு 3 விருது: சிறந்த நடிகையாக பிரான்சஸ் மெக்டார்மண்ட் தேர்வு

2021-04-27@ 00:17:23

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகமே பெரிதும் எதிர்பார்க்கும் மிகப்பெரிய சினிமா விருதுகளில் ஆஸ்கர் விருது முக்கியமானது. 93வது ஆஸ்கர் விருது விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள யூனியன் ஸ்டேஷன் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள டால்பி தியேட்டரில் நேற்று நடந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக விழாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வழக்கமாக பிரமாண்டமான முறையில் நடைபெறும் இவ்விழா, கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் எளியமுறையில் நடந்தது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய விழாவில், பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் முதலில் ரெட் கார்பெட் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரிவு கலைஞர்கள் கலந்துகொண்டனர். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடந்தது.

பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு, உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும் இவ்விழா, இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில், சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் இயக்கிய ‘நோமேட்லேண்ட்’ என்ற திரைப்படம் 3 ஆஸ்கர் விருதுகள் வென்றது. சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் ‘நோமேட்லேண்ட்’ படம் விருதுகள் வென்றது. சிறந்த நடிகருக்கான விருதை ‘தி பாதர்’ என்ற படத்தில் நடித்த ஆண்டனி ஹாப்கின்ஸ், சிறந்த நடிகைக்கான விருதை ‘நோமேட்லேண்ட்’ படத்தில் நடித்த பிரான்சஸ் மெக்டார்மண்ட் பெற்றனர். சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை டென்மார்க்கின் ‘அனதர் ரவுண்ட்’ பெற்றது.

ஆஸ்கர் வரலாற்றில், சிறந்த பெண் இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெறும் 2வது பெண் க்ளோயி சாவ் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, கடந்த 2010ல் கேத்ரின் பிக்லோ என்பவர், ‘தி ஹர்ட் லாக்கர்’ என்ற படத்துக்காக வென்றார்.
5 படங்களுக்கு 2 ஆஸ்கர் விருதுகள்: ‘சோல்’, ‘மங்க்’, ‘சவுண்ட் ஆப் மெட்டல்’, ‘மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம்’, ‘நோமேட்லேண்ட்’ ஆகிய 5 படங்கள் தலா 2 ஆஸ்கர் விருதுகள் வென்றது. சிறந்த பின்னணி இசை, சிறந்த அனிமேஷன் திரைப்படம் ஆகிய விருதுகள் ‘சோல்’ படத்துக்கு கிடைத்தது. சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி அமைப்பு ஆகிய விருதுகளை ‘சவுண்ட் ஆப் மெட்டல்’ திரைப்படம் வென்றது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் ‘மங்க்’ திரைப்படம் விருது வென்றது. சிறந்த ஒப்பனை, ஆடை வடிவமைப்பு ஆகிய விருதுகள் ‘மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம்’ படத்துக்கு கிடைத்தது. சிறந்த படம், சிறந்த இயக்குனருக்கான விருதுகள் ‘நோமேட்லேண்ட்’ படத்துக்கு கிடைத்தது.

சிறந்த மூல திரைக்கதை - எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்), சிறந்த துணை நடிகர் - டேனியல் கல்லுயா (ஜூடாஸ் அன்ட் பிளாக் மெசியா), சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - செர்ஜியோ லோபஸ் நிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம்), சிறந்த ஆவண குறும்படம் - கோலெட், சிறந்த ஒளிப்பதிவாளர் - எரிக் மெசர்ச்மிட் (மங்க்), மனிதாபிமான விருது - டைலர் பெர்ரி, சிறந்த ஆவணப்படம் - மை ஆக்டோபஸ் டீச்சர், சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ, சிறந்த படத்தொகுப்பாளர் - மைக்கேல் நெல்சன் (சவுண்ட் ஆப் மெட்டல்), தழுவல் திரைக்கதை - கிறிஸ்டோபர் புளோரியன் (தி பாதர்). சிறந்த பின்னணி இசை - டிரென்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்), சிறந்த பாடல் - பைட் ஃபார் யூ (ஜூடாஸ் அன்ட் பிளாக் மெசியா), சிறந்த துணை நடிகை - யூ ஜங் யூன் (மினாரி), சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்,

சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் - ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்), ஆடை வடிவமைப்பு - அன் ரோத் (மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்), சிறந்த ஒலி அமைப்பு - நிகோலஸ் பெகர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆப் மெட்டல்). இர்பான் கானுக்கு அஞ்சலி: 93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், கடந்த ஆண்டு உயிரிழந்த பிரபல நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பாலிவுட் நடிகர் இர்பான் கானுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய படங்களில் மட்டுமின்றி, ஹாலிவுட் படங்களான ‘லைப் ஆப் பை’ , ‘ஸ்பைடர்மேன்’, ‘ஜூராசிக் வேர்ல்டு’ ஆகிய படங்களிலும் இர்பான் கான் நடித்துள்ளார். தவிர, இந்திய ஆடை வடிவமைப்பாளர் பானு அதயாவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.