சென்னை: வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைப்பது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். மே 2ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் என்று வெளியான தகவல் உண்மை இல்லை என கூறினார். வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைப்பது குறித்து எவ்வித ஆலோசனையும் நடைபெறவில்லை. மே 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.ஓட்டு எண்ணிக்கைக்கான மேஜைகளை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஓட்டு எண்ணும் அறை சிறியதாக இருந்தால், 2 அறைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். ஒரு அறைக்கு 7 மேஜைகள் என 14 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் மே 2-ம் தேதி காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும். 8:00 மணிக்கு தபால் ஓட்டுகளும், 8:30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படும் என கூறினார்.
மே 1ம் தேதி சனிக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என கூறினார். தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.