வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றியை கொண்டாட தடை: ஆணையம் உத்தரவு

2021-04-27@ 10:49:47

டெல்லி: தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போதும் வெற்றிக்கு பிறகமு் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை அடுத்து தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மே 2--ம் தேதி தேர்தல் வெற்றியை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரியில் ஒரே  தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் மட்டும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏப்.29.ம் தேதியுடன் மேற்கு வங்கத்தில் தேர்தல் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களில் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. மே 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். 72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

மேலும், 14 மேசைகளில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் திரையரங்குகள், மால்கள், பெரிய கடைகள், சலூன்கள் போன்ற கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.