அரசின் நிர்வாக சீர்கேடு

2021-04-25@ 00:11:58

கொரோனா 2வது அலை எதிர்பார்த்ததை போல, தனது தீவிர முகத்தை காட்டி, ஒட்டுமொத்த இந்தியாவையும் மிரட்டி வருகிறது. கடந்தாண்டு கொரோனா சீனாவில் பரவியபோதே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி ட்விட் மூலம் எச்சரித்திருந்தார். கொரோனா வைரஸ் இந்திய மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியத்துவம் கொடுக்காதது கவலை அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

வழக்கம்போல இதுவும் ‘‘பப்பு கமெண்ட்’’ என்று, மத்திய பாஜ அரசு அலட்சியம் செய்தது. வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் வந்த இந்தியர்களை, தனிமைப்படுத்தி பரிசோதித்திருந்தால் இந்தளவுக்கு கொரோனா தாக்கம் தீவிரமடைந்திருக்காது. ஆனால், மாநில அரசியலில் குழப்பம் விளைவிப்பது, ஆட்சியை கலைக்க திட்டமிடுவது போன்ற விஷயங்களில் மட்டுமே பாஜ தலைவர்கள் தீவிரமாக இருந்தனர். அதன் விளைவை மக்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு நாட்டின் தலைநகரில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை எப்படி சகித்துக் கொள்வது? டெல்லி உயர்நீதிமன்ற வார்த்தைகளை விட, மத்திய அரசை சாடுவதற்கு வேறு வார்த்தைகள் தேவையில்லை. ‘‘பிச்சை எடுங்கள். திருடுங்கள். ஆனால், மக்கள் உயிரைக் காத்திடுங்கள்’’ எனக்கூறி உள்ளதே, மத்திய அரசின் நிர்வாக சீர்கேட்டை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 மணி நேரத்தில், 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்ததை சாதாரணமாக கருதி விட முடியாது. வடமாநிலங்களில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளவர்களை லேசாக பாதிக்கப்பட்டவர்கள், தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் என வகைப்படுத்தலாம். அவர்களை எல்லாம் ஒரே படுக்கையில் படுக்க வைப்பதை விட கொடுமையான விஷயம் வேறு ஒன்றுமில்லை. ஆக்சிஜன், மருந்துகள், படுக்கைகள் என எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு. கொரோனா 2வது அலை தீவிரமாகும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், இதற்காக மத்திய அரசு எடுத்த முன்நடவடிக்கை என்ன? கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அவசியம்; அதற்கான இருப்பை அதிகப்படுத்த வேண்டியது அவசியம் என்பதை, மத்திய அரசு உணரவே இல்லையா?

டெல்லி அதிகாரத்தை கைப்பற்றுவதில் காட்டிய ஆர்வத்தை, கொஞ்சமாவது அங்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு காட்டி இருக்கலாம். இன்று பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நம் நிலைமையை கண்டு உதவிக்கரம் நீட்ட வந்தது பாராட்ட வேண்டிய விஷயம். அதே நேரம் தன் பிள்ளை பாலுக்காக கதறி அழும்போது, பக்கத்து வீட்டு பிள்ளைக்கு பால் வழங்குவதை போல மத்திய அரசின் செயல்பாடுகள் அதிர்ச்சியை அளிக்கின்றன.
இந்திய மக்கள் ஆக்சிஜனுக்கு அலையும்போது, அண்டை நாடுகளுக்கு ஆக்சிஜனை வாரி வழங்கியதை எப்படி எடுத்துக் கொள்வது என தெரியவில்லை.

இதேபோல தடுப்பூசி விஷயத்திலும் மத்திய மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை. முறையாக விழிப்புணர்வு செய்யாததால், மக்கள் முதல் தவணை, 2வது தவணைக்தடுப்பூசி போட முடியாத நிலை நாள்தோறும் தொடர்கிறது. எனவே, இனியாவது அரசியல் ஆடு, புலி ஆட்டத்தை நிறுத்திக் கொண்டு, நாட்டின் வளர்ச்சியை பற்றி மத்திய பாஜ அரசு சிந்திக்க வேண்டும்.