சென்னை: பிரபல பாடகியின் 15 வயது மகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பிருந்தாவனம் காலனியை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஒருவர், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார். இவர், கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது 15 வயது மகளுடன் புகார் ஒன்று அளித்தார். அதில், எனது 15 வயது மகளை தங்கை வீட்டில் விட்டு சென்றபோது, தங்கையின் கணவர், தங்கை கணவரின் சகோதரி மகன் மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாதிரியார் ஆகியோர் தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில், கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் பாடகியின் தங்கை, தங்கையின் கணவர், தங்கை கணவரின் சகோதரி மகன் மற்றும் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பாதிரியார் ஹென்றி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதுபற்றி அறிந்த 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். செல்போன் சிக்னலை வைத்து திண்டிவனம் அருகே பண்ணை வீட்டில் தங்கி இருந்த பாதிரியார் ஹென்றி உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.