இந்தியாவில் கடந்த ஆண்டு காலூன்றிய கொரோனா தொற்று, குறைவது போன்று ஒரு மாயை ஏற்படுத்தி திடீரென இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து கோர முகத்தை காட்டி வருகிறது. கடந்த ஆண்டைவிட தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஒருபுறம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், கொரோனாவால் பாதிக்கப்படுவர்கள் திடீரென உயிரிழப்பது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் சடலத்துடன் ஆம்புலன்ஸ் மயானங்களில் வரிசை கட்டி நிற்பதை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது.
அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய படுக்கை வசதிகள் இல்லை. உருமாறிய கொரோனாவால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் போதிய இருப்பு இல்லை. தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று விரும்புபவர்களுக்கு ஊசி போடுவதற்கு போதிய மருந்து இல்லை. முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு ஆக்சிஜன் போதிய அளவு வினியோகம் செய்யப்படும் என்றும், தடுப்பூசி போதிய அளவு இருப்பு உள்ளது என்றும் பூசி மெழுகி வருகிறது. இந்தியாவில் திடீரென, கொரோனா கடும் உச்சத்தை அடைவதற்கு யார் காரணம். ஊரடங்கு தளர்வு என்று தேர்தலை மனதில் வைத்து மத்திய, மாநில அரசுகள் அனைத்தையும் திறந்துவிட்டது தான் காரணமா? கடந்த ஆண்டைவிட தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் மெத்தனமாக செயல்படுவது ஏன்? தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளதால் அதிகாரம் இல்லாத காபந்து அரசு செயல்படுகிறது. இவர்களால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அதிகாரிகளும் யாரை தொடர்பு கொள்வது, என்ன திட்டத்தை செயல்படுத்துவது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு உடலில் ஆக்சிஜன் அளவு குறைய காரணமாக உள்ளது. ஆனால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் மற்றும் ஐசியு படுக்கைகள் பற்றாக்குறையே காரணமாக உள்ளது என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
மே மாத மத்தியில் கொரோனா 2வது அலை உச்சமடையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு இருக்கையில், மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளன. ஊரடங்கு என்ற ஆயுதத்தை பயன்படுத்துவது மட்டுமே கொரோனா பரவலை தடுக்க தீர்வாகாது. ஊரடங்கால் பொருளாதாரம் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. மாணவர்கள் படிப்பை மூட்டை கட்டி தூக்கிபோட்டுவிட்டனர்.
இளைஞர்கள் வேலை கிடைப்பதற்குள் தலைமுடி நரைத்துவிடும் போல இருக்கு என்று விரக்தியில் உள்ளனர். இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்க போகிறார்கள். முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளி கடைபிடியுங்கள் என்று மக்களிடமே பொறுப்பை மாற்றிவிட்டு, அரசும், அதிகாரிகளும் தப்பித்துக்கொள்ள நினைக்க கூடாது. தேவை.. உடனடியாக கொரோனா தடுப்புக்கு உறுதியான நடவடிக்கை. அரசு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்று மக்கள் மட்டுமல்ல சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.