அரியலூரில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைகளின் உடல்கள்: போலீசார் விசாரணை

2021-04-23@ 14:32:57

அரியலூர்: அரியலூரில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைகளின் உடல்களை அப்பகுதி மக்கள் புதைத்துள்ளனர். அவற்றை காவல் துறையினர் தோண்டி எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ளது அதனக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை சுரங்கத்திற்கு அருகே ஒரு சிறிய ஓடை உள்ளது. இந்த ஓடை கரைகளில் முட்புதரில் நேற்று மாலை பிறந்து சிலமணி நேரங்களே ஆன இரட்டை குழந்தைகளான ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிசுகளின் உடல்களில் எறும்பு மொய்ப்பதை கிராமமக்கள் பார்த்துள்ளனர். நமது ஊரில் இவ்வாறு கிடக்கிறது என்று நினைத்து கொண்டு கிராமமக்கள் அந்த பச்சிளம் குழந்தைகளின் உடல்களை புதைத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த கிராமத்தின் விஏஓ ராயர் தளவாய் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து செந்துறை வட்டாட்சியர் குமரய்யா மற்றும் தளவாய் போலீசார் குழந்தைகள் புதைத்த இடத்தில் இருந்து தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழந்தைகள் குறை பிரசவத்தால் இறந்திருக்கலாமா அல்லது எதனால் இவ்வாறு தூக்கி வீசப்பட்டது என்பது குறித்தும், இது யாருடைய குழந்தைகள் என்பது குறித்தும் தளவாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.