எல்லாவற்றிற்கும் மக்களை குறைசொல்லிக்கொண்டு இருக்க முடியாது. கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் ஊடுருவும் போது யாரையும் கேட்காமல், ஏன் எந்தவித அவகாசமும் வழங்காமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை நீடிக்கத்தான் செய்தது. பெரும் முடக்கம். மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்தார்கள். இத்தனை செய்தும், இரண்டாவது அலையை கணிக்கத்தவறியது, அல்லது கட்டுப்படுத்த தவறியது மக்கள் தவறா? நிச்சயம் இல்லை. மத்திய அரசின் தவறான முடிவுகள் மட்டுமே.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை சராசரியாக தினமும் 90 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதன்பின் வைரஸ் தீவிரம் குறைந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் முற்றிலும் வைரசை இந்தியா விரட்டி விட்ட மனநிலை இருந்தது. இரண்டு தடுப்பூசிகள் வேறு அறிமுகப்படுத்தப்பட்டது. மிகுந்த வெற்றி மமதை மத்திய அரசை ஆட்கொண்டது. அதன் எதிரொலி மக்கள் மனதிலும் தொற்றிக்கொண்டது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி, முகக்கவசம் அத்தனையும் காற்றில் பறக்கவிடப்பட்டன. இன்னும் ஒருபடி மேலே போய் கொரோனாவை வெற்றி கொண்ட போர் வீரனாக மோடி கொண்டாடப்பட்டார்.
இந்த காலகட்டத்தில் சட்டசபை தேர்தல்கள், கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்விளைவை நாடு இன்று சந்தித்து கொண்டு இருக்கிறது. ஒரு மாதத்திற்கும் குறுகிய கால இடைவெளியில் கொரோனா தினசரி தாக்கம் 2.50 லட்சத்தை தாண்டி உச்சத்தை தொட்டு இருக்கிறது. தினசரி பலி எண்ணிக்கை 1500க்கும் மேல் உள்ளது. மருத்துவமனையில் படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை, மருந்து இல்லை, வென்டிலேட்டர் வசதி இல்லை. இன்னும் ஏராளமான இல்லை கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அதை விட இறந்தவர்கள் உடலை எரிக்க கூட இடம் கிடைக்கவில்லை. குஜராத், உபியில் பொதுவெளியில் தடுப்பு சுவர் அமைத்து ஒட்டுமொத்தமாக எரிக்க வேண்டிய அவலம் வந்து இருக்கிறது.
இந்தியாவின் மிகப் பெரிய தடுப்பூசித் திட்டம் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. 10 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்தாலும் மீதம் உள்ளவர்களுக்கு வழங்கமுடியாத பற்றாக்குறை நிலை. இப்போது மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்கே தட்டுப்பாடு உள்ள நேரத்தில் மருந்து கடைகளிலும் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறுவது அரசின் இயலாமையை வெளிப்படையாக காட்டுகிறது.
கொரோனா இரண்டாவது அலை விவகாரத்தில் அரசு தவறு செய்துவிட்டது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போதே கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி இருக்க வேண்டும். தேவையான ஆக்சிஜன், வென்டிலேட்டர் போன்ற வசதிகளை செய்து இருக்க வேண்டும். ஆனால் மோசமான நிலையில் தான் இந்தியாவின் மருத்துவகட்டமைப்புகள் இருக்கின்றன. இன்னும் நிறைய அலைகள் வரும் என்கிறார்கள் தொற்று நோயியல் நிபுணர்கள். அதையெல்லாம் எதிர்கொள்ள தயார்நிலையில் இந்தியா இருக்க வேண்டும். அதைவிட்டு தவறான முடிவுகளை எடுக்க கூடாது. இதுதான் ஆட்சியாளர்களுக்கு இரண்டாவது அலை கற்றுத்தந்த பாடம்.