வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால்தான் 7 நோயாளி இறப்பு: திடுக்கிடும் தகவல்கள்

2021-04-21@ 00:22:07

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் உட்பட 7 பேர் இறப்புக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் ஆக்சிஜன் சப்ளையில் ஏற்பட்ட சிக்கலே காரணம் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போதைய நிலையில் 121 பேர் வென்டிலேட்டர் வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பின் உண்மையான எண்ணிக்கையை அரசு மறைத்து வரும் வேளையில், கொரோனா நோயாளிகளின் மரணங்களும் மறைக்கப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும்  கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 251. கடந்த ஆண்டில் இதேகாலக்கட்டத்தில் இதைவிட மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே கொரோனா தொற்றின் பாதிப்பு இருந்தது.

அதிதீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கூறி, அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா உட்பட நோயாளிகள் காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த லீலாவதி(72), ஆற்காட்டை சேர்ந்த ராஜேஸ்வரி(68), விருதம்பட்டை சேர்ந்த வெங்கடேசன், ஜோலார்பேட்டையை சேர்ந்த செல்வராஜ்(66), கண்ணமங்கலம் ராஜேந்திரன் (52), பிரேம் (38), கபாலி ஆகிய 7 பேர் ஒரே சமயத்தில் இறந்தனர். இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என்று நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், கலெக்டர் சண்முகசுந்தரம், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு ஆகியோர் நோயாளிகள் மரணத்துக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என்று மறுப்பு தெரிவித்தனர்.

சம்பவம் நடந்தவுடன் நோயாளிகளுக்கு தனித்தனி சிலிண்டர்கள் அவசர, அவசரமாக கொண்டு வரப்பட்டு, வார்டுகளுக்கு தூக்கிக் கொண்டு ஓடிச் செல்லும் காட்சிகளும், ஆக்சிஜன் பிளான்ட்களில் உருகிய வாயுவை திரவ நிலைக்கு கொண்டு வர தண்ணீர் பீய்ச்சியடிக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகாரிகளின் கூற்றை பொய்யாக்கியுள்ளன. உண்மையில் என்னதான் நடந்தது? என்பது தொடர்பாக மருத்துவக்கல்லூரி வட்டாரத்தில் விசாரித்தபோது, ஆக்சிஜன் பிளான்டில் இருந்து அனைத்து வார்டுகளுக்கும் பித்தளை பைப் லைன் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. அவை ஒவ்வொரு படுக்கையிலும் நோயாளிக்கு செலுத்தும் உபகரணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் வார்டுக்கு செல்லும் பிரதான பைப்பில் ஏற்பட்ட வெடிப்பே நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செல்வதில் சிக்கலை ஏற்படுத்தி அதிக பாதிப்புக்குள்ளானவர்களை மரணத்தில் தள்ளியுள்ளது.

இதை அறிந்ததும் அவசர, அவசரமாக சிலிண்டர்களை கொண்டு வந்து பிற நோயாளிகளுக்கு பொருத்தி சமாளித்துள்ளனர். அதோடு அன்றைய தினம் வழக்கமான பராமரிப்பு பணியின்போது ஏற்பட்ட கவனக்குறைவால்தான் இந்த சிக்கலே ஏற்பட்டது என்கின்றனர் மருத்துவமனை ஊழியர்கள். மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் நர்ஸ்கள் உள்ளிட்டோரின் அலட்சிய போக்கும், கவனக்குறைவும் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. எனவே, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவும் இத்தகைய அலட்சிய போக்குக்கு விடை கொடுத்து அடித்தட்டு, நடுத்தர மக்களின் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

பராமரிப்பில் குளறுபடி

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 7 பேர் இறந்த அன்று ஆக்சிஜன் பிளான்ட் பராமரிப்பு பணி நடந்ததாக கூறப்படுகிறது. அப்பணியின்போது ஏற்பட்ட கவனக்குறைவால்தான் குறிப்பிட்ட வார்டுக்கு செல்லும் ஆக்சிஜன் லைனில் பழுது ஏற்பட்டு நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக மருத்துவமனை பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.