உத்தர பிரதேசத்தில் திடீர் திருப்பம்… மாட்டேன் என்ற யோகி அரசு ஜகா வாங்கியது… வாரஇறுதி லாக்டவுன்-ஐ உறுதி செய்தது!!

2021-04-21@ 08:15:05

லக்னோ : உத்தர பிரதேசத்தில் வரும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை வாரஇறுதி லாக்டவுன் விதிக்கப்படும் என முதல்வர் யோகி தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், லக்னோ உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் வரும் 26ம் தேதி வரை ஊரடங்கு விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உபி மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு வாரஇறுதி லாக்டவுன் மற்றும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

இது குறித்து உத்தர பிரதேச உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவானிஷ் அவஸ்தி கூறுகையில், ஏப்ரல் 23ம் தேதி முதல் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வார இறுதி லாக்டவுன் விதிக்கப்படும் என்பதை உறுதி செய்தார். மேலும் லாக்டவுன் காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:

லாக்டவுன்