ரயில், விமான பயணத்திற்காக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் போலியாக தயாரித்து மோசடி: வாலிபர் கைது

2021-04-21@ 00:02:55

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே ரயில், விமான பயணத்துக்காக கொரோனா நெகட்டிவ் சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சத்தலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (29). பர்கூர், திருப்பத்தூர் சாலையில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் ஆபீஸ் நடத்தி வரும் இவர், ரயில் மற்றும் விமானம், சொகுசு பேருந்து பயணத்திற்கு டிக்கெட் புக்கிங் செய்து கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் போலியாக கொரோனா நெகட்டிவ்  சான்றிதழ் தயாரித்து, அரசு மருத்துவர் கையெழுத்து, அரசு மருத்துவமனை முத்திரை போன்றவற்றை போட்டு பயணிகளுக்கு கொடுத்து வந்துள்ளார்.

பர்கூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் அதிகளவில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் ரயிலில் பயணம் செய்ய, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்பதால் இவ்வாறு போலி சான்றிதழ் தயாரித்து, டிக்கெட் புக்கிங் செய்து கொடுத்துள்ளார். இது குறித்து அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் அளித்த புகாரின் பேரின்  பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து, தினேஷை நேற்று கைது செய்தனர்.