முடிவு கட்டுவோம்

2021-04-20@ 00:46:49

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்துள்ளது. கொரோனா உருவாகி ஓராண்டை கடந்தும் முழுமையாக வேரறுக்க முடியவில்லை. உலக நாடுகள் ஒன்றிணைந்தும் கடிவாளம் போட முடியவில்லை. கொரோனா நீண்ட காலம் இருக்கும். எனவே தினசரி வாழ்க்கையில் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவுவதற்கான வாய்ப்புகள், துவக்கம் முதலே இருந்து வந்தன. இதனையறிந்து முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்க வேண்டும். முக்கியமாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிகப்படுத்தி இருந்தால், தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது. நாடு முழுவதும் மக்கள் நெருக்கமாக  வசிக்கும் பல்வேறு நகரங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம்.

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான நபர்கள் எத்தனை கோடி பேர் என்பதை அரசு ஆரம்பத்திலேயே கணக்கெடுத்திருக்க வேண்டும். தொடர்ந்து பல கோடி தடுப்பூசி தயாரித்து மாநிலம் முழுவதும் அனுப்பி வைத்திருக்க வேண்டும். தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கு வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்ததும் முக்கிய காரணம். தடுப்பூசி திருவிழா என்ற வார்த்தை மூலம் மட்டுமே  அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி விடமுடியாது என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். பாஜ ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் தடுப்பூசி விநியோகத்தில் முன்னுரிமை அளிப்பதும் ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல.

மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவ வசதிகள் இல்லை என்பது வேதனையின் உச்சக்கட்டம். மத்திய அரசு நினைத்திருந்தால், நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கடந்த ஓராண்டுக்குள் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளை ஆக்சிஜன் வசதியுடன் கட்டி முடித்திருக்கலாம். இதை செய்யாதது ஏன்? மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி  2 ஆண்டுகளை கடந்தும் முதல்கட்ட பணிகள் கூட தொடங்காத நிலையில்தான் உள்ளது. அரசுகள் இப்படிச் செயல்பட்டால், இதுபோன்ற வைரஸ் பேரிடர்களை இனி வரும் காலங்களில் எப்படி எதிர்கொள்வது? உக்கிர தாண்டவமாடும் கொரோனா வைரசை மத்திய அரசு எப்படி கையாளப்போகிறது என்பது தான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

டீக்கடை, உணவகம், மளிகை கடை, காய்கறி கடை  ஆகியவற்றில் முகக்கவசம் அணிந்தால் தான் அனுமதி என்பதை உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். கடந்த முறை ஊரடங்கின்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வளவு பேர்  இறந்தனர், பாதிக்கப்பட்டனர் என்ற விவரம் கூட அரசிடம் இல்லை. தற்போது மீண்டும் அந்த நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது. பொதுமக்களின் வாழ்வாதாரம் கருதி, மத்திய அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

கொரோனா தொற்றை தடுக்க ஆக்கப்பூர்வமான தெளிவான யுக்தி உடனடி தேவை. கொரோனாவுக்கு முடிவு கட்டுவது எளிதான காரியம் அல்ல. பரவலை தடுப்பது, தற்காப்பு நடவடிக்கை, கட்டுக்குள் இருப்பது ஆகியவை தான் தற்போதைய தேவை. அரசும், மக்களும் இணைந்தால் மட்டுமே முற்றுப்புள்ளி வைக்க முடியும். மத்திய அரசு, மலிவான அரசியல் நடவடிக்கைகளை கைவிட்டு, மக்கள் நலன் கருதி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இனி தீவிரம் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Tags:

தலையங்கம்