மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது. மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த 2-வது அலை காரணமாக இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 1 லட்சத்து 84 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் ஒரு பகுதியாக வழிபாட்டுத் தலங்களில் மக்கள் அதிகம் கூடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவை கடைபிடிக்கப்படுகிறதா என கண்காணிக்கப்படுகிறது. ஆனால் ஹரித்துவார் கும்பமேளாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தை பார்க்கும்போது கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்துவிட்டது கண்கூடாகத் தெரிந்தது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த 1ம் தேதி தொடங்கி கும்பமேளா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் 2-வது புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள், சாதுக்கள் என லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் அங்கு வந்திருந்த மக்கள் கூட்டம் அச்சத்தை ஏற்படுத்தியது. அங்கு வந்திருந்த பெரும்பாலானோர் அரசு அறிவுறுத்தியிருந்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. பலர் முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியை பின்பற்றுதல் முற்றிலும் மீறப்பட்டிருந்தது.
இந்த எச்சரிக்கையின்மை காரணமாக கொரோனா ெதாற்று பரவும் இடமாக மாறியது. நேற்று முன்தினம் மாலை வரை கும்பமேளாவில் பங்கேற்ற 18,169 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 102 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விழாவில் கலந்துகொண்ட மேலும் பலருக்கு தொற்று பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்க வரக்கூடும் என்பது தெரிந்திருந்தும் உத்தரகாண்ட் அரசு அதை கட்டுப்படுத்தாததும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை சரிவர செய்யாததும் ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது.
கும்பமேளா நடைபெறும் இடத்தில் தெர்மல் பரிசோதனை செய்வதற்குகூட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், விழாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்த சான்றிதழ் பெறப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் இங்கு பின்பற்றப்படாமல் இருந்ததை மத்திய அரசும், மாநில அரசும் கண்டுகொள்ளாமல் விட்டது அரசுகளின் அலட்சியத்தை காட்டுகிறது.
பல லட்சம் மக்கள் கூடும் இந்த இடத்தில் கண்டிப்பாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா. ஒரு பக்தருக்கு தொற்று இருந்தாலும் அது அங்கு வந்திருக்கும் மற்ற அனைவரையும் பாதிக்கும் என்பதைகூட அறியாமல் செயல்பட்டது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதுபோன்ற அலட்சியம் மேலும் தொடர்ந்தால் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் 2 லட்சத்தை தாண்டும் அபாயம் உள்ளது. அந்த அபாய கட்டத்தைத் தாண்டாமல் இருக்க எந்த ஒரு இடத்திலும் விதிமீறல்களுக்கு அரசு இடம் கொடுக்கக்கூடாது. துணை போகவும் கூடாது. மக்கள் நலனில் விழிப்புடன் இருக்கவேண்டியது அரசின் கடமை.