புதுடெல்லி: ‘பிரிந்த மனைவியின் பராமரிப்பு செலவுக்கு பணம் தர வேண்டியது கணவனின் கடமை,’ என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 1985ம் வருடம் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் 2012ம் ஆண்டில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகன்கள் கேட்டு கொண்டதால் விவாகரத்து செய்யவில்லை. இதனிடையே, குடும்ப செலவு, பிள்ளைகளின் பராமரிப்புக்காக கணவர் பணம் தர வேண்டுமென்று கோரி மனைவி ஜீவனாம்சம் வழக்கு தொடுத்தார். அதில், ‘ துணை உதவி ஆய்வாளராக பணியாற்றும் எனது கணவர் மாதம் ரூ.50,000 சம்பளம் பெறுகிறார். விவசாய நிலங்களின் மூலமும் வருவாய் கிடைக்கிறது,’ என கூறியிருந்தார். இதை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், ‘எனது மனைவி மாடலிங் தொழிலில் அவர் சம்பாதிக்கிறார். பிரபல பத்திரிகைகளின் அட்டை படங்களில் அவருடைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. எனவே, அவருக்கு பராமரிப்பு செலவுக்கு பணம் தர முடியாது,’ என்று கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், ‘பத்திரிகை அட்டைகளில் படம் வந்தால் பணம் கிடைத்து விடுமா? மனைவி, குழந்தைகளை பராமரிப்பது கணவனின் கடமை. எனவே, மனுதாரர், தனது மனைவி, பிள்ளைகளின் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.17,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும்,’ என்று உத்தரவிட்டார்.