‘ஓட்டு போடாதவங்கள்ளாம் பணத்தை திருப்பி கொடுங்க’ அமைச்சர் செல்லூர் ராஜூஆதரவாளர்கள் மிரட்டல்: பொதுமக்கள் வாக்குவாதம்; மதுரையில் பரபரப்பு

2021-04-08@ 02:21:49

மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் ஓட்டு போடாதவர்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக பொதுமக்களுக்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினர் வீடு வீடாக சென்று தலா ஆயிரம் ரூபாய் விநியோகித்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தொகுதியின் அதிமுக பூத் ஏஜென்ட்கள், வாக்காளர் பட்டியலை வைத்து ஓட்டு போடாதவர்களின் பெயர் பட்டியலை தயாரித்தனர்.

அந்த பட்டியலை வைத்துக்கொண்டு வீடு, வீடாக அதிமுகவினர் சென்றனர். ஓட்டு போடாதவர்களிடம், நீங்கதான் ஓட்டு போடல்லையே, பணத்தை திருப்பக் கொடுங்க என்று கேட்டு மிரட்டல் விடுத்து வருவதாக தெரிகிறது. மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பணத்தை திரும்பக் கேட்டபோது, அப்பகுதி மக்களுக்கும், அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஆட்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பின்னர், ‘‘நாளையும் நாங்கள் வருவோம். கண்டிப்பாக பணத்தை திருப்பித் தந்தே ஆகவேண்டும்’’ என எச்சரிக்கை விடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதேபோல் தொகுதியின் பல்வேறு இடங்களிலும் பணத்தைத் திரும்பக் கேட்பதாக புகார் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.