சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம்!: காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க மாநகராட்சி முடிவு..!!

2021-04-08@ 10:12:54

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மீண்டும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் நேற்று மட்டும் 1459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க சென்னை மாநகராட்சி எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் காய்ச்சல் முகாம் பெரிதும் கை கொடுத்தது. எனவே சென்னை முழுவதும்  காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். மேலும் கொரோனா சோதனையான ஆர்.டி.பி.சி.ஆர். எண்ணிக்கையை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நேற்று மட்டும் 200 வார்டுகளில் சுமார் 230 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த காய்ச்சல் முகாம்கள் மூலம் அறிகுறி உள்ளவர்கள் தொற்று ஏற்படுவதற்கு முன்பே கண்டுபிடித்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதால் தொற்று பரவாமல், உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.