* 2வது அலை தொடங்கிய நிலையில் டெண்டர் எடுக்க மறுப்பு
* ஒப்பந்த நிறுவனங்கள் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
சென்னை: கொரோனா காலத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்க மேற்கொண்ட அவசர பணிகளுக்கு கடந்த 6 மாதங்களாக ₹135 கோடி விடுவிக்காமல் உள்ளனர். இதனால், இரண்டாவது அலை தொடங்கிய நிலையில் அவசர பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனங்கள் மறுத்து விட்டதால் பொதுப்பணித்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், இந்த உத்தரவை பின்பற்றாமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாக கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துக்கு பிறகு ெகாரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு கட்டத்தில், 8 ஆயிரம் பேர் வரை பாதிக்கும் நிலை இருந்தது. இதனால், மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகள் நிரம்பின.
இதற்கிடையே, பொதுப்பணித்துறை சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு தாலுகா மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைப்பதற்கு தேவையான படுக்கை வசதி, கழிப்பறை வசதி, மின் வசதி, ஆக்சிஜன் வசதி, மின் விசிறி, டியூப் லைட்டுகள் மற்றும் இதர மின் பணிகள் ஆகிய அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உடனுக்குடன் அனுமதிக்க முடிந்தது. இந்நிலையில், கொரோனா காலத்தில் சிறப்பு வார்டுகள் அமைக்க மேற்கொண்ட அவசர பணிகளுக்கு கடந்த 6 மாதங்களாக 135 கோடி வரை பணப்பட்டுவாடா செய்யாமல் நிலுவை வைத்திருப்பதாக தெரிகிறது. மேலும், தற்போது, ₹135 கோடியை விடுவிப்பதற்கான கோப்பு நிதித்துறையிடம் பல நாட்களாக கிடப்பில் இருப்பதாக தெரிகிறது.
இதன் காரணமாக ஒப்பந்ததாரர்கள் பணியின் காலத்தில் வாங்கிய கட்டுமான பொருட்கள் மற்றும் மின் பொருட்களுக்கான பணம் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். மேலும், இப்பணிகளை மேற்கொள்வதற்காக வாங்கிய கடனுக்கு வட்டிக்கு கட்டி வருகின்றனர். இந்நிலையில், நிலுவை தொகையை தரக்கோரி, பொதுப்பணித்துறை கட்டுமான ஒப்பந்ததாரர்கள் பொதுநல சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினர். இதுதொடர்பாக, நிதித்துறைக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது, ெகாரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியது. இதனால், மீண்டும் கொரோனா சிறப்பு வார்டுகள் கூடுதலாக அமைக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், கொரோனா முதல் அலையில் மேற்கொண்ட பணிக்கே பணம் வராத நிலையில், இரண்டாவது அலைக்கான அவசர பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனங்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது பொதுப்பணித்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.