தேர்தல் பாதுகாப்புக்கு வந்தவர்கள் போட்டுக்கொடுத்தனர் தெலங்கானா போலீஸ் போல பதவி உயர்வு, சம்பளம் இல்லையே? தமிழக போலீசார் வேதனை : வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைரல்

2021-04-08@ 02:28:07

சேலம்: தேர்தல் பாதுகாப்புக்கு வந்த தெலங்கானா போலீசார் தங்களது பதவி உயர்வு, சம்பளத்தை கூறியதால் தமிழக போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தங்களுக்கு அதுபோல இல்லையே?  என தெரிவித்து, வாட்ஸ்அப்பில்  ஸ்டேட்டஸ் வைத்து தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பாதுகாப்பு பணிக்காக தெலங்கானா மாநில பயிற்சி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 400க்கும் மேற்பட்டோர், சேலம் மாவட்டம் முழுவதும் பணியில் இருந்தனர். அப்போது தெலங்கானா போலீசாரின் சம்பளத்தை கேட்டு, சேலம் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தெலங்கானாவில் 6 மாத பயிற்சி வழங்கப்படும். புதியதாக சேருபவர்களுக்கு பயிற்சி காலங்களில் மாதம் 9 ஆயிரம் சம்பளம், பயிற்சி முடித்ததும் அலவன்ஸ் சேர்த்து 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால் தமிழக போலீசாருக்கு 9 மாத பயிற்சி முடிந்ததும் அலவன்ஸ் உள்பட 25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல், பதவி உயர்வை பொறுத்தவரை, 3 ஆண்டுக்கு ஒரு முறை தெலங்கானா போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. 15 ஆண்டுகளில் எஸ்ஐயாக பதவி உயர்த்தப்படுகின்றனர். ஆனால், தமிழக போலீசார் எந்தவித தவறும் செய்யாமல் இருந்தால், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால் எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு பெறுகின்றனர். தெலங்கானா போலீசாருக்கு மாதத்திற்கு 8 நாளும், ஆண்டுக்கு 15 நாட்களும் தற்செயல் விடுப்பு வழங்கப்படுகிறது. அதே சமயம், தமிழக போலீசாருக்கு மாத விடுமுறையே கிடையாது. ஆண்டுக்கு 12 நாட்கள் தற்செயல் விடுமுறை மட்டும் வழங்கப்படுகிறது. இதேபோல், தெலங்கானா ஊர்க்காவல்படை வீரர்களுக்கு, வாரத்தில் 5 நாட்கள் பணிக்கு மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு ₹25 ஆயிரம் கொடுக்கப்படுகிறது.

ஆனால், தமிழக ஊர்க்காவல்படைக்கு மாதம் 15 நாட்கள் வேலை, ஒரு நாளுக்கு 150 அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இதையெல்லாம் கேட்டு தமிழக போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், தெலங்கானா போலீசாரின் சம்பளம் உள்ளிட்டவற்றை வைத்து, அதே போல சம்பளம், பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.