புழல்: பெரம்பூர் தீட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜலாலுதீன்(24). இவர் புழல் அடுத்த விநாயகபுரம் செம்பியம் - செங்குன்றம் சாலை பகுதியில், செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், வழக்கம்போல் 8 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, ரிப்பேர் செய்வதற்காக வாடிக்கையாளர் கொடுத்த 5 செல்போன்கள், ஐந்து புதிய செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து, அவர் புழல் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.