திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 20 பேர் 49 பி சட்டப்பிரிவை பயன்படுத்தி வாக்களித்தனர். ஒரு வாக்காளர் தனது வாக்கை வேறு யாராவது செலுத்தியிருந்தால், தேர்தல் நடத்தை விதிப்படி 49 பி சட்டப் பிரிவை பயன்படுத்தி தான் வாக்காளர் என்பதற்கான ஆவணங்களை காட்டி, வாக்குச் சீட்டு மூலம் டென்டர் வாக்கு செலுத்தலாம். நேற்றுமுன்தினம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 20 பேரின் வாக்குகள் கள்ள வாக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வாக்குக்கு உரிய 20 பேர் 49பி சட்டப்பிரிவை பயன்படுத்தி வாக்குச்சீட்டு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.திருச்சி கிழக்கு தொகுதியில் 7, திருச்சி மேற்கு 4, திருவெறும்பூர் 3, லால்குடி 3, ரங்கம் 2, மணப்பாறை 1 என 20 பேர் டெண்டர் வாக்குகளை செலுத்தினர்.