உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க திட்டம்? இன்று பிரதமருடன் முக்கிய ஆலோசனை

2021-04-08@ 02:36:52

சென்னை: தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் கொரோனா பாதிப்பு குறித்தும் அதை தடுப்பதும் குறித்தும் நேற்று உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்க முடிவு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பிரதமருடன், தமிழக தலைமை செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் பொதுமக்கள், நிறுவனங்களின் வசதிக்காக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டாலும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் உள்ளனர். அதாவது மாஸ்க் அணிவதில்லை, சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் அதிகமான இடங்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். இதையடுத்து தமிழகத்தில் தற்போது கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 3,986 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,459 பேர், செங்கல்பட்டில் 390 பேர், கோவையில் 332 பேர், திருவள்ளூரில் 208 பேர் உள்பட பல மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு மீண்டும் கொரோனா ஊடரங்கு அமல்படுத்தப்படலாம் என்று வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் தலைமையில் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் 3 மணி நேரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்து வருவது குறித்தும் அதை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது ஊரடங்கு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடாமல், மக்கள் கூடும் இடங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக கடற்கரை, பூங்காக்கள் செல்ல தடை விதிக்க வாய்ப்புள்ளது. திருமணம் உள்ளிட்ட திருவிழாக்களில் பொதுமக்கள் கூடுவதை 50 சதவீதமாக குறைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

அதேநேரம் பிரதமர் மோடி இன்று கொரோனா பரவல் அதிகளவில் உள்ள தமிழகம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை செயலாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் சார்பில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அப்போது, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.