இந்தூர்: மத்திய பிரதேசத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதால் மகன் கண்முன்னே தந்தையை 2 போலீசார் அடித்து உதைத்துக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணா கெயர். இவர் தனது மகன் மற்றும் மனைவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தந்தையை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த முகக்கவசம் மூக்குக்கு கீழே இறங்கி கிடந்தது. இதனால், அவரை தடுத்து நிறுத்திய 2 போலீசார் முகக்கவசத்தை சரியாக அணியாதது குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது, அவர் அளித்த விளக்கத்தை ஏற்காத போலீசார், கிருஷ்ணாவை கண்மூடித்தனமாக தாக்கினர். அவரை பிடித்து கீழே தள்ளியும், கழுத்தின் மீது கால் வைத்து மிதித்தும் கொடூரமாக அடித்து உதைத்தனர். அவரது மகன் தனது தந்தையை விட்டுவிடும்படி போலீசாரிடம் கெஞ்சியும், போலீசார் இருவரும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கிருஷ்ணா மீது தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த பொதுமக்கள் யாரும் இதனை தடுக்க முன்வராமல் அனைவரும் அச்சத்தில் உறைந்தபடி நின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இது பற்றி விசாரித்த போலீஸ் உயரதிகாரிகள், தாக்குதல் நடத்திய கமல் பிரஜாபத், தர்மேந்திரா தேஜ்ஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.