புதுடெல்லி: 13 பொது கழிவுப்பொருள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் (சிஇடிபி) விளக்கம் கேட்டு டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம்(டிபிசிசி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு வரும் 2023 க்குள் யமுனை நதியை மாசு இல்லாததாக மாற்ற உறுதிபூண்டுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் கழிவுகள் யமுனை ஆற்றில் வெளியேற்றுவதற்கு முன்பாக அவற்றை சுத்திகரிப்பு செய்த பின்னரே வெளியேற்ற வேண்டும். அதேபோன்று சுத்திகரிக்கப்பட்ட பின்னர் உள்ள நீரை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட தர நிலையை பராமரிக்க வேண்டும் என்பது விதி. இதற்கான விதிகளை இந்த தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றுகையில் கடைபிடிக்கிறதா என்பது குறித்து தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அப்போது, டிபிசிசி அறிவுறுத்திய பின்னரும் செயல்படாமல் இருந்த அல்லது குறிப்பிட்ட தரஅளவை பராமரிக்காத 13 தொழிற்சாலைகள் விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அடுத்த 15 நாட்களுக்குள் உரிய விதிகளை பின்பற்றாவிட்டால் இந்த தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ₹12.05 கோடி அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.