‘பயோ பபுள்’ வாழ்க்கை கடினமானது...: கங்குலி சொல்கிறார்

2021-04-07@ 00:07:44

மும்பை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பான உயிர் குமிழி சூழலில் தங்கியிருக்கும் வாழ்க்கை கடினமானது. ஆனால், இந்த விஷயத்தில் வெளிநாட்டு வீரர்களை விட இந்தியர்கள் அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். கொரோனாவால் 2020, மார்ச் முதல் இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டன. 2020, செப்டம்பரில் ஐபிஎல் தொடர் மூலம் இந்திய வீரர்கள் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பினர். அதன் பிறகு, யுஏஇ-ல் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா சென்று ஜன.17 வரை விளையாடினர். அங்கிருந்து வந்தவுடன் பிப்.5 - மார்ச் 28 வரை இங்கிலாந்துடன் விளையாடினர்.

இந்த காலகட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, பல மாதங்களாக ‘பயோ பபுள்’ சூழலில் தங்கியுள்ளனர். வெளியில் செல்ல கடும் கட்டுப்பாடுகள். ஒவ்வொரு தொடருக்கு முன்பாகவும் 7 முதல் 14 நாள் தனிமைப்படுத்துதல். அறையை விட்டே வெளியில் வர முடியாது. அவ்வளவு கடுமையான கெடுபிடிகள். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்காக மீண்டும் இந்திய வீரர்கள் பாதுகாப்பு குமிழியில் இணைந்துள்ளனர். மே மாதம் வரை இப்படி இருப்பவர்கள், அடுத்து ஐசிசி உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாட இங்கிலாந்து செல்ல வேண்டும். அதற்கடுத்து டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை, இங்கிலாந்து சுற்றுப்பயணம் என்று இந்திய வீரர்களுக்கு தொடர்ந்து போட்டிகள் இருக்கின்றன.

இது குறித்து கங்குலி கூறியதாவது: வெளிநாட்டு வீரர்களை விட இந்தியர்களான நாங்கள் அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்று நினைக்கிறேன். நான் நிறைய வெளிநாட்டினருடன் விளையாடி இருக்கிறேன். அவர்கள் மன ஆரோக்கியத்தை விட்டு விடுகிறார்கள். கடந்த 7 மாதங்களில், உயிர் பாதுகாப்பு குமிழியில் இருந்து கிரிக்கெட் விளையாடுவது கடினமானது. ஓட்டல் அறையில் இருந்து நேரடியாக விளையாட்டு அரங்குக்கு செல்வது, அங்கிருந்து நேரடியாக அறைக்கு திரும்புவது எல்லாம் கடினமான, மாறுபட்ட வாழ்க்கை முறை. அதை இந்தியர்கள் தொடர்ந்து கடைபிடிக்கின்றனர். அதே சமயம், ஆஸ்திரேலிய அணி மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருந்த போட்டிகளில் இருந்து விலகிவிட்டது. நமக்கும் கொரோனா அச்சுறுத்தல் இருக்கிறது. அடுத்தது நானாக இருக்கமாட்டேன் என்ற நம்பிக்கையும் உள்ளது. நேர்மறையான சிந்தனையுடன் நீங்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் நல்லது நடக்கும். இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.