வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கண்டித்த பெண் மீது தாக்குதல்: அதிமுக பிரமுகர் அடாவடி

2021-04-06@ 00:18:05

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெசன்ட்நகர் திடீர் நகர் பகுதியில் நேற்று அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக்கிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு, அதிமுக 181வது  வட்ட அம்மா பேரவை துணை வட்ட செயலாளர் ஆல்பட் என்பவர் நித்யா, கார்த்திகை, பிரியா ஆகியோரிடம் வாக்கு கேட்டுள்ளார். மேலும், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க ரூ.500 கொடுத்துள்ளார். அதை வாங்க மறுத்த பெண்கள், நாங்களும் அதிமுகவை சேர்ந்தவர்கள் தான். ஓட்டுக்கு எதற்கு பணம் கொடுக்கிறாய், யாராவது பார்த்தால் பிரச்னையாகி விடும், என தெரிவித்துள்ளனர்.

அப்போது, அதிமுக பிரமுகர், அந்த பெண்களை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர், வாய் தகராறு கைககளப்பாக மாறியதால் பதற்றம் நிலவியது. அப்போது, அதிமுக பிரமுகர் தாக்கியதில் ஒரு பெண்ணின் ஆடை கிழிந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தகவலறிந்த வேளச்சேரி அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்காதபடி சமரசம் பேசியுள்ளார்.