தென் ஆப்ரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் 2வது போட்டி ஜோகன்னஸ்பர்கில் நேற்று முன்தினம் நடந்தது. டாஸ் வென்ற பாக். முதலில் பந்துவீச... தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 341 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 24.3 ஓவரில் 120 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. ஒரு முனையில் சக பேட்ஸ்மேன்கள் அணிவகுப்பு நடத்திய நிலையில், தொடக்க ஆட்டக்காரர் பகார் ஜமான் தனி ஒருவனாகப் போராடினார். தனது அதிரடியால் தென் ஆப்ரிக்க பந்துவீச்சை தவிடு பொடியாக்கிய அவர் கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் அவுட்டானார். பகார் 193 ரன் குவித்தது (155 பந்து, 18 பவுண்டரி, 10 சிக்சர்), ஒருநாள் போட்டி சேசிங்கில் புதிய சாதனையாக அமைந்தது.
இதற்கு முன்பு சேசிங்கில் ஷேன் வாட்சன் (ஆஸி) 2011ல் வங்கதேசத்திற்கு எதிராக 185* ரன், தோனி 2005ல் இலங்கைக்கு எதிராக 183* ரன், விராத் கோஹ்லி 2012ல் பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன் விளாசி முதல் 3 இடங்களில் இருந்தனர். இப்போது அவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பகார் பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் தோற்ற அணியில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தையும் அவர் எட்டியுள்ளார். முதல் இடத்தில் 194 ரன்னுடன் ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கவென்ட்ரி இருக்கிறார். அவர் 2009ல் வங்கதேசத்திற்கு எதிராக இந்த சாதனையை படைத்தார்.
கடைசி வரை பரபரப்பாக அமைந்த போட்டியில், பாக். அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 324 ரன் எடுத்து 17 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. போட்டி முடிந்ததும் பேட்டியளித்த பகார், ‘இரட்டை சதம் கை நழுவியதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் வெற்றி பெறாமல் போனது ஏமாற்றமளிக்கிறது. ரன் அவுட்டானதற்கு என்னுடைய தவறு தான் காரணம்’ என்றார். இவர் ஏற்கனவே 2018ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 210* ரன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,
* ஏமாற்றினாரா டி காக்?
பாகிஸ்தான் அணி என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியில் பகார் ரன் அவுட்டானதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பகார் 2வது ரன்னுக்கு ஓடும்போது பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் டி காக், ஒரு முனையில் உள்ள வீரரின் பெயரை அழைத்து, ‘இந்தா பந்தை பிடி’ என்று சொல்லிவிட்டு அடுத்த முனையில் இருந்த மார்க்ரமுக்கு எறிந்தார். அப்படி அழைக்கும்போது பகார் திரும்பி பார்த்துள்ளார். அதனால் ஓடும் வேகம் குறைந்தது. இப்படி பகாரின் கவனத்தை திசைதிருப்பி மறுமுனைக்கு பந்தை வீசியது மோசடியான செயல் என்று முன்னாள் வேகம் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். கடைசி ஓவரில் பாக். வெற்றிக்கு 31 ரன் தேவைப்பட்ட நிலையில், பகார் முதல் பந்தில் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தாலும் 2 ரன் எடுத்திருப்பார். அடுத்த 5 பந்திலும் சிக்சர் அடித்து வெற்றியை வசப்படுத்தி இருப்பாரா என்பது சந்தேகமே.