இந்தோனேஷியாவில் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய 44 பேர் பலி

2021-04-05@ 05:33:20

ஜகர்தா: இந்தோனேஷியாவில் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 44 பேர் பலியாகி உள்ளனர். இந்தோனேஷியாவில் பெய்து வரும் பருவமழையால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் ப்ளோரஸ் தீவில் நேற்று முன்தினம் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு, 10க்கும் மேற்பட்ட வீடுகளை மண் மூடியது. பல வீடுகள் இடித்து சேதமாகின. அதில் இருந்தவர்கள் மண்ணில் புதைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர், இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த 38 பேரின் சடலங்களை மீட்டனர். மேலும், காயமடைந்த நிலையில் 5 பேர் மீட்கப்பட்டனர்.

ஓயாங்க் பயாங்க் கிராமத்தில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், 40 வீடுகள் சேதமாகின. இதனால், நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். வெள்ளத்தில் சிக்கி பலியான 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெய்புரக் கிராமத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 7 பேரின் கதி தெரியவில்லை. மேற்கு நுசா டெங்கரா அருகே உள்ள பிமா மாகாணத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அங்கு வசிக்கும் 10 ஆயிரம் பேர் வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தோனோஷியாவில் ஒவ்வொரு ஆண்டும் மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுவது வாடிக்கை. கடந்த ஜனவரியில் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலச்சரிவினால் 40 பேர் உயிரிழந்தனர்.